சோழன் பயணம் 3 பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள் விஜயாலய சோழன் முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல் தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும். இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும் முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக் கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன. இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச் செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள், அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள். பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர் தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத் தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக் கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவ...