பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள்
விஜயாலய சோழன் முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை
புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல்
தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும்.
இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும்
முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக்
கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை
இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன.
இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச்
செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள்,
அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய
வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள்.
பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக
உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர்
தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத்
தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக்
கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவில்
திருப்பணிகள் செய்தல் முதலிய நற்பணிகளைக் குறிக்க
வந்த அவற்றில், “இன்னின்ன இடங்களில் இன்னவரை
வென்ற இன்ன அரசன் பட்டம் பெற்ற இன்ன ஆண்டில்”.
என்று விளக்கமாக வரும் முதற் பகுதியே வரலாற்றுக்குப்
பெருந்துணை செய்வதாகும். சில கல்வெட்டுகள் அரசியல்
தொடர்பாக எழுந்துள்ளன. அவை என்றுமே
நிலைத்திருக்கத் தக்கவை. அவை வரிவிதித்தல், நிலவரி,
தொழில்வரி, ஊரவைகளின் முடிவுகள், தொழில் முறைகள்,
அரசியல் முறைகள் இன்ன பிறவும் விளக்குவனவாகும். பல
கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய
நிலம் விற்றல், வீடு விற்றல், மனை விற்றல், வாங்கல் முதலிய
செய்திகளையும் குறிக்கின்றன. சில கோவில் சுவர்களில்
தேவார நூல்களில் காணப்பெறாத சம்பந்தர் முதலியோர்
பாக்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் இக்கல்
வெட்டுகள் வரலாற்றுக்குப் பல துறைகளிலும் பேருதவி
புரிதல் காணலாம். இவையே அன்றி, இக்கல் வெட்டுகளால்
அக்கால வடமொழி-தமிழ் இவற்றின் வளர்ச்சி - நடை
மாறுபாடு முதலியவற்றையும் அறியலாம். வட்டெழுத்து,
பல்லவ-கிரந்த எழுத்து, சோழர் காலத் தமிழ் எழுத்து ஆகிய
இம்மூன்று தமிழ் எழுத்துகளையும் இக் கல்வெட்டுகளால்
நன்குணர்தல் கூடும்.
Comments
Post a Comment